iOS 26இல் புதியவை என்ன
பூட்டுத் திரை.உங்கள் பூட்டுத் திரைப் புகைப்படம் அல்லது வால்பேப்பருக்கு ஏற்ப திரையில் காட்டப்படும் கடிகாரம் அதன் நிலையைத் தானாகவே மாற்றிக் கொள்ளும், இதனால் திரையில் உள்ளவற்றைப் பார்ப்பதில் உங்களுக்கு இடையூறு ஏற்படாது. உங்கள் iPhoneஐ நகர்த்தும்போது, பூட்டுத் திரைப் புகைப்படம் புதிய 3D எஃபெக்ட்டுடன் தத்ரூபமாகத் தெரியும். பிரத்தியேக iPhone பூட்டுத் திரையை உருவாக்குதல் என்பதைப் பார்க்கவும்.

முகப்புத் திரை.உங்கள் முகப்புத் திரையில் உள்ள செயலி ஐகான்கள் புதிய தோற்றத்தைப் பெற்றுள்ளன. அவற்றை நீங்கள் வெவ்வேறு நிறங்களில் டின்ட் செய்யலாம் அல்லது வெளிர், அடர், தெளிவு போன்றவற்றுக்கு மாற்றலாம். iPhone முகப்புத் திரையில் உள்ள செயலிகளையும் விட்ஜெட்களையும் பிரத்தியேகப்படுத்துதல் என்பதைப் பார்க்கவும்.

Apple Intelligence. *ஏற்கெனவே உள்ள இமோஜியைப் பயன்படுத்தியோ, வெவ்வேறு இமோஜிகளை ஒருங்கிணைத்தோ, விளக்க உரையைப் பயன்படுத்தியோ பிரத்தியேக Genmojiஐ உருவாக்கலாம். உங்கள் புகைப்பட லைப்ரரியில் உள்ள நபர்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் Genmoji மற்றும் Image Playground படைப்புகளின் தோற்றத்தையும் உணர்வையும் மாற்றலாம். உங்கள் மெசேஜஸ் உரையாடல்களுக்குப் பிரத்தியேகப் பின்னணிகளை வடிவமைக்கலாம். “நேரலை மொழிபெயர்ப்பு” அம்சம் மெசேஜஸில் உள்ள உரைகளைத் தானாக மொழிபெயர்க்கும், FaceTime அழைப்புகளில் மொழிபெயர்த்த நேரலை கேப்ஷன்களைக் காட்டும், மேலும் ஃபோன் அழைப்புகளுக்குப் பேச்சு மொழிபெயர்ப்புகளை வழங்கும். விஷுவல் நுண்ணறிவு அம்சத்தைப் பயன்படுத்தி உங்கள் iPhone திரையில் நீங்கள் பார்ப்பவற்றைப் பற்றி மேலும் அறியலாம். iPhoneஇல் Image Playground மூலம் அசல் படங்களை உருவாக்குதல், iPhoneஇல் நீங்களே Genmoji மூலம் இமோஜியை உருவாக்குதல், Image Playground மூலம் அசல் பின்னணிகளை உருவாக்குதல் திருத்துதல், iPhoneஇல் மெசேஜ்கள், அழைப்புகள் மற்றும் உரையாடல்களை மொழிபெயர்த்தல், iPhone திரையின் உள்ளடக்கங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுதல் ஆகியவற்றைப் பார்க்கவும்.

கேமரா.இந்த எளிதாக்கப்பட்ட வடிவமைப்பில், புகைப்படம் மற்றும் வீடியோ பயன்முறைகளை விரைவாக அணுகும் வகையில் ஹைலைட் செய்து காட்டப்படும், மற்ற கேமரா பயன்முறைகளை அணுக ஸ்வைப் செய்தால் போதும். இப்போது கேமரா கட்டுப்பாடுகள் அனைத்தும் திரையில் ஒன்றாகக் குழுவாக்கப்பட்டுள்ளதால், உங்கள் கேமரா அமைப்புகளை விரைவாகவும் எளிதாகவும் மாற்றலாம். கேமரா பயன்முறைகளுக்கு இடையே மாறுதல், உங்கள் ஷாட்டை அமைக்க iPhone கேமரா கருவிகளைப் பயன்படுத்துதல் ஆகிய கட்டுரைகளைப் பார்க்கவும்.

ஃபோன்.உங்கள் ஃபோனை ரிங் செய்வதற்கு முன்பு தேவையான தகவல்களைச் சேகரிக்கும் “அழைப்புச் சோதனை” அம்சத்தின் மூலம், தெரியாத எண்களால் ஏற்படும் தேவையற்ற கவனச்சிதறல்களைக் குறைக்கலாம். அழைப்பை எடுப்பதா, நிராகரிப்பதா அல்லது கூடுதல் தகவல்களைக் கேட்பதா என்று தகவலறிந்த முடிவுகளை நீங்கள் இந்த அம்சத்தைப் பயன்படுத்தி எடுக்கலாம். உங்கள் அழைப்பு ஹோல்டு செய்யப்படும்போது ஹோல்டு அசிஸ்ட் அம்சத்தைப் பயன்படுத்தி காத்திருந்து, மீண்டும் அழைப்பிற்குத் திரும்புவதற்கான நேரம் வரும்போது அறிவிப்பைப் பெறலாம். iPhoneஇல் அழைப்புகளை ஸ்கிரீன் செய்து தடுத்தல், ஹோல்டில் இல்லாதபோது அறிவிப்பைப் பெறுதல் ஆகிய கட்டுரையைப் பார்க்கவும்.

மெசேஜஸ்.தெரியாத எண்களிலிருந்து வரும் மெசேஜ்கள் நீங்கள் மறுபரிசீலனை செய்வதற்கும் அங்கீகரிப்பதற்கும், ஃபில்டர் செய்யப்பட்டு உங்கள் உரையாடல் பட்டியலில் ஒரு தனி பகுதிக்கு நகர்த்தப்படுகின்றன. “பின்னணிகள்” மூலம் உரையாடல்களைத் தனிப்பயனாக்கலாம். இதன் மூலம் டைனமிக் பின்னணிகள், உங்களுடைய புகைப்படங்கள், Image Playgroundஇல் நீங்கள் உருவாக்கும் பின்னணிகள் ஆகியவற்றை அனைவரும் பயன்படுத்தலாம். குழு உரையாடல்களில், முடிவெடுப்பதற்கு உதவியாக நீங்கள் கருத்துக்கணிப்புகளை உருவாக்கலாம், Apple Cashஐப் பயன்படுத்திப் பணம் அனுப்பலாம், டைப்பிங் இண்டிகேட்டர்களைப் பார்க்கலாம். iPhoneஇல் மெசேஜ்களை ஸ்கிரீன் செய்தல் மற்றும் ஃபில்டர் செய்தல், iPhoneஇல் உள்ள மெசேஜஸ் செயலியில் பின்னணிகளைச் சேர்த்தல், மெசேஜஸில் Apple Cash மூலம் பேமெண்ட்டுகளை அனுப்புதல், கோருதல் மற்றும் பெறுதல், iPhoneஇல் மெசேஜ்களில் வாக்கெடுப்பு நடத்துதல் ஆகிய கட்டுரைகளைப் பார்க்கவும்.

ஃபோட்டோஸ்.உங்கள் லைப்ரரி மற்றும் சேகரிப்புகளுக்கு இடையே எளிதாக மாறும் வகையில் வடிவமைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இப்போது “சேகரிப்புகள்” காட்டப்படும் விதத்தை நீங்கள் பிரத்தியேகமாக்கலாம், அவற்றை மறுவரிசைப்படுத்தலாம், பின் செய்யவேண்டியதைத் தேர்வுசெய்யலாம், மூன்று டிஸ்ப்ளே அளவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்: பெரிய டைல்கள், அடர்த்தியான கிரிட் அல்லது மேல் வரிசையை ஹைலைட் செய்து காட்டும் லே-அவுட். iPhoneஇல் உங்கள் புகைப்பட லைப்ரரியைப் பார்த்தல், iPhoneஇல் உங்கள் புகைப்படச் சேகரிப்புகளைப் பார்த்தல் ஆகியவற்றைப் பார்க்கவும்.

மேப்ஸ்.பணியிடம், வீடு போன்ற நீங்கள் அடிக்கடி செல்லும் இடங்களுக்கான உங்கள் விருப்பமான வழித்தடத்தை மேப்ஸ் கற்றுக்கொள்ளும். நீங்கள் வெளியே செல்வதற்கு முன்பு, உங்கள் விருப்பமான வழித்தடத்தின் நிலைமைகள் குறித்து (எ.கா. போக்குவரத்து நெரிசல், சாலை மூடப்படுதல் போன்றவை) உங்களுக்குத் தெரிவித்து மாற்று வழிகளை வழங்கும். “சென்ற இடங்கள்” அம்சம் நீங்கள் இதுவரை சென்ற இடங்களைப் பதிவுசெய்யும், இதன்மூலம் அந்த இடங்களைப் பின்னர் நினைவுகூரலாம், நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பகிரலாம். iPhoneஇல் உள்ள மேப்ஸ் செயலியில் டிரைவிங் வழிகளைப் பெறுதல், நீங்கள் சென்ற இடங்களை iPhone மேப்ஸ் செயலியில் பார்த்து நிர்வகித்தல் ஆகிய கட்டுரைகளைப் பார்க்கவும்.

கேம்ஸ்.நீங்கள் விளையாடும் அனைத்து கேம்களையும் கண்காணிக்கவும், புதிய கேம்களைக் கண்டறியவும், பொருத்தமான பரிந்துரைகளைப் பெறவும், நண்பர்களுடன் சவால்களைத் தொடங்கவும் இந்தப் புதிய செயலி உதவும். iPhoneஇல் Apple Games செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

ஆடியோ பதிவு.வீடியோ கான்ஃபரன்ஸ் அழைப்புகளின்போது “கேமரா” செயலியைப் பயன்படுத்தி உயர்தர ஆடியோ மற்றும் வீடியோவைப் பதிவுசெய்யலாம். உள்ளீட்டைத் தேர்வுசெய்வதற்கான புதிய அம்சம், ஒவ்வொரு செயலிக்கும் சரியான மைக்ரோஃபோனைப் படைப்பாளர்கள் தேர்வுசெய்வதை எளிதாக்குகிறது. iPhoneஇல் ஆடியோ மற்றும் வீடியோவைப் பதிவுசெய்தல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

இசை.AutoMix அம்சத்தைப் பயன்படுத்தி, DJ செய்வதைப் போல ஒரு பாடலை அடுத்த பாடலுடன் மிக்ஸ் செய்யலாம். iPhoneஇல் உள்ள இசை செயலியில் ஒலியின் தரத்தைச் சரிசெய்தல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
நினைவூட்டல்கள்.(iOS 26.2) நினைவூட்டலுக்கான நேரம் வரும்போது உங்களுக்குத் தெரிவிக்கும் அலாரத்தை அமைக்க நினைவூட்டலை அவசர நினைவூட்டல் எனக் குறிக்கவும். iPhoneஇல் உள்ள நினைவூட்டல்களில் விவரங்களைச் சேர்த்தல் என்பதைப் பார்க்கவும்.
வாலெட்.“வாலெட்” செயலியில் நீங்கள் சேமிக்கும் போர்டிங் பாஸ்கள் உங்கள் விமானம் மற்றும் விமான நிலையம் பற்றிய தொடர்புடைய தகவல்களுக்கான அணுகலையும் விமானச் செயலியின் அம்சங்களையும் வழங்குகின்றன. iPhone சாதனத்தில் உள்ள வாலெட் செயலியில் பாஸ்களைப் பயன்படுத்துதல் என்பதைப் பார்க்கவும்.

டிஜிட்டல் ஐடி.(iOS 26.1) “வாலெட்” செயலியில் டிஜிட்டல் ஐடியை உருவாக்கலாம். இது பாஸ்போர்ட் மூலம் சரிபார்க்கப்பட்ட ஐடி ஆகும். உள்நாட்டுப் பயணங்களுக்கான விமான நிலையங்களில் உள்ள குறிப்பிட்ட சில TSA சோதனைச் சாவடிகளில் அல்லது வயதுச் சரிபார்ப்பு தேவைப்படும் ஆதரிக்கப்படும் செயலிகள் அல்லது இணையதளங்களில் நீங்கள் இதைக் காட்டலாம். டிஜிட்டல் ஐடியைச் சேர்த்தல் (அமெரிக்காவில் மட்டும்) என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
முன்னோட்டம்.இப்போது iPhoneஇல் “முன்னோட்டம்” செயலி கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் PDF ஆவணங்களையும் படங்களை எளிதில் பார்க்கலாம், திருத்தலாம், பகிரலாம். முன்னோட்டம் செயலியில் ஆவணங்களை ஸ்கேன் செய்யலாம், அதிலுள்ள “தானாக நிரப்புதல்” அம்சத்தைப் பயன்படுத்தி படிவங்களை விரைவாக நிரப்பலாம், PDFகளையும் படங்களையும் வேறு கோப்பு வகைகளாக அல்லது வேறு அளவுகளில் எக்ஸ்போர்ட் செய்யலாம். iPhoneஇல் முன்னோட்டம் செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல் என்பதைப் பார்க்கவும்.

கடிகாரம்.உங்களுக்கு விருப்பமான தூங்கும் வழக்கத்துடன் பொருந்தும் வகையில் உங்கள் அலாரத்திற்குப் பிரத்தியேக ஒத்திவைப்பு நேரத்தை அமைக்கலாம். அலாரத்தை அமைத்தல் என்பதைப் பார்க்கவும்.

அணுகல்தன்மை.இணைக்கப்பட்ட பிரெய்ல் டிஸ்ப்ளே மூலம் பிரெய்ல் பயனர்கள் “பிரெய்ல் அணுகல்” அம்சத்தில் புதிய அனுபவத்தைப் பெறலாம். அதன் மூலம் குறிப்பு எடுக்கலாம், ஆவணங்களை வாசிக்கச் செய்து கேட்கலாம், நேரலை கேப்ஷன்களை அணுகலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம். “வாகன நகர்வுப் புள்ளிகள்” அம்சம் இயங்கும் வாகனங்களில் பயணிகளுக்கு ஏற்படும் குமட்டல் உணர்வைக் குறைக்க உதவும். நீங்கள் வேறொருவரின் சாதனத்திலும் உங்கள் அணுகல்தன்மை அமைப்புகளைத் தற்காலிகமாகப் பயன்படுத்தலாம். iPhoneஇல் பிரெய்ல் டிஸ்ப்ளே மூலம் பிரெய்ல் அணுகலைப் பயன்படுத்துதல், வாகனத்தில் பயணிக்கும்போது iPhoneஐ இன்னும் வசதியாகப் பயன்படுத்துதல், iPhoneஇல் இருந்து உங்கள் அணுகல்தன்மை அமைப்புகளை வேறொரு சாதனத்துடன் பகிர்தல் ஆகியவற்றைப் பார்க்கவும்.

குடும்பம்.சாதனத்தை அமைக்கும்போது, 13–17 வயதுடைய வளர்ந்த குழந்தைக்காகச் சாதனத்தை அமைக்கிறார்களா என்பதைப் பெற்றோர் குறிப்பிடலாம். அந்தச் சாதனத்தில் வயதுக்கு ஏற்ற பாதுகாப்புகள் தானாகச் செயல்படுத்தப்படும். iPhoneஇல் செயலிகளுடன் வயது வரம்புகளைப் பகிர்தல் என்பதைப் பார்க்கவும்.

ஜர்னல்.உங்கள் வாழ்க்கையின் வெவ்வேறு விஷயங்களின் அடிப்படையில் பல ஜர்னல்களை உருவாக்கலாம். நீங்கள் எழுதும்போது உரையுடன் இன்லைனில் வரைபடங்களைச் சேர்க்கலாம். உங்கள் ஜர்னல் பதிவுகளின் இருப்பிடத்தை மேப்ஸில் பார்க்கலாம் பல ஜர்னல்களை உருவாக்குதல், iPhoneஇல் உள்ள ஜர்னலில் வடிவமைத்தல், புகைப்படங்கள் மற்றும் பலவற்றைச் சேர்த்தல், iPhoneஇல் உங்கள் ஜர்னல் பதிவுகளைப் பார்த்தல் மற்றும் தேடுதல் ஆகியவற்றைப் பார்க்கவும்.

CarPlay.புதிய வடிவிலான CarPlay செயலி நீங்கள் வாகனம் ஓட்டும்போது iPhoneஐப் பயன்படுத்துவதை எளிதானதாகவும் பாதுகாப்பானதாகவும் ஆக்குகிறது. மெசேஜஸ் செயலியில் உள்ள Tapbacks அம்சம் வாகனம் ஓட்டும்போது நீங்கள் பெறும் மெசேஜ்களுக்கு விரைவாகப் பதிலளிப்பதை எளிதாக்குகிறது. உங்கள் விருப்பமான செயலிகளின் தகவல்களை ஒரே பார்வையில் தெரிந்துகொள்ள விட்ஜெட்கள் உதவும், டாஷ்போர்டில் உள்ள “நேரலைச் செயல்பாடுகள்” நிகழ்நேரத்தில் நிகழ்வுகளைக் கண்காணிக்க உதவும். Tapbacks மூலம் உணர்வை வெளிப்படுத்துதல், CarPlayக்கான விட்ஜெட்டைச் சேர்த்தல், CarPlayஇல் நேரலைச் செயல்பாடுகளைப் பார்த்தல் ஆகியவற்றைப் பார்க்கவும்.
வானிலை.இனிவரும் சேருமிடத்திற்கான ஸ்மார்ட் ஸ்டேக்கில் வானிலை விட்ஜெட்டைச் சேர்க்கலாம். அந்த இருப்பிடத்திற்கான தீவிர வானிலை விழிப்பூட்டல்களைப் பெறுவதற்குத் தேர்வுசெய்யலாம். பரிந்துரைக்கப்படும் இருப்பிடத்திற்கான வானிலை அறிவிப்புகளைப் பெறுதல் என்பதைப் பார்க்கவும்.
iOS 26க்கான உத்திகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.உதவிக்குறிப்புகள் செயலியில் புதிய பரிந்துரைகள் வழக்கமாகச் சேர்க்கப்படும். இதன்மூலம் iPhoneஇல் இருந்து நீங்கள் அதிகப் பலனை அடையலாம். உதவிக் குறிப்புகளைப் பெறுதல் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
குறிப்பு: உங்கள் iPhone மாடல், வட்டாரம், மொழி, நெட்வொர்க் வழங்குநர் ஆகியவற்றைப் பொறுத்து புதிய அம்சங்களும் செயலிகளும் மாறக்கூடும்.